புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பர்கான் தசீர்கான் (வயது 35). 2015-ம் ஆண்டு இவர் காண்டிராக்டராக இருந்து வந்தார். இவருக்கு சொந்தமாக வாகனங்களும் இருந்தது. இந்த நிலையில் அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக பர்கான் தசீர்கான் வாகனங்களை விற்று தாய் சிகிச்சைக்காக செலவு செய்தார். இதனால் கடனில் தத்தளித்த அவர் ஒடிசாவுக்கு சென்று பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். ஆனால் அதில் அவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இருந்தாலும் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என யோசித்தார். இதற்காக அவர் இணையதளத்தில் தனியாக ஐ.டி. உருவாக்கி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தன்னை பிடித்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என செல்போன் எண்ணையும் தெரிவித்து இருந்தார்.
மேலும் தான் என்ஜினீயரிங் படித்து தொழில் செய்து வருவதாகவும், ஆண்டுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.
பெண்களை கவரும் வகையில் தனது ஸ்டைலான புகைப்படங்களையும் விதவிதமாக வெளியிட்டார்.
அதனை உண்மை என நம்பி பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அந்த பெண்களிடம் அவர் தனியாக சந்திக்க வேண்டும் என கூறி ஒரு இடத்துக்கு வரவழைப்பது பர்கான் தசீர்கானின் வழக்கம். அதன்படி அந்த பெண்களும் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு வருவார்கள்.
அந்த பெண்களை கவரும் வகையில் பர்தான் தசீர்கான் பி.எம். டபுள்யூ சொகுசு காரில் டிப்டாப்பாக உடை அணிந்து செல்வார். அந்த காரில் வி.வி.ஐ.பி, பயன்படுத்தும் பேன்சி நம்பரும் இடம் பெற்று இருக்கும். விலை உயர்ந்த செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை அவர் பயன்படுத்தினார்.
அவரது இந்த தோரணையை பார்த்து ஏமாந்த பல பெண்கள் அவரிடம் தங்களது மனதை பறி கொடுத்தனர்.
மேலும் அவர் சொகுசு காரிலும் பெண்களை அழைத்து சென்று நட்சத்திர ஓட்டல்களில் உணவுகளை வாங்கி கொடுத்து அசத்துவார். அப்போது தன்னை முழுமையாக நம்பும் பெண்களிடம் விரைவில் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும் அதனால் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
அந்த பெண்களை மயக்குவதற்காக பர்கான் தசீர்கான் விமானம் மற்றும், குளு,குளு வசதி கொண்ட ரெயிலில் பயணம் செய்வார். அப்போது அவர் தன்னிடம் வீழ்ந்த பெண்களை வீடியோ காலில் பேசி தன்னை பெரிய தொழில் அதிபர் போல காட்டி கொள்வார்.
இப்படி உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்த 100 பெண்களிடம் அவர் இது போன்று திருமண ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி சுமார் ரூ. 1 கோடி வரை பணத்தை கறந்தார்.
அவரை திருமணம் செய்ய எய்ம்ஸ் மருத்துவமனை பெண் டாக்டர் ஒருவர் சம்மதம் தெரிவித்தார். அவரிடமும் வழக்கம் போல தனது பந்தாவை காட்டி அவரிடம் இருந்து தொழில் தொடங்குவதாக கூறி ரூ. 15 லட்சத்தை பறித்தார்.
ஆனால் அதன் பிறகு அந்த டாக்டரை பர்கான் தசீர்கான் கழற்றி விட்டார். அவர் போன் செய்தால் எடுக்காமல் தவிர்த்தார். மேலும் பெண் டாக்டர் அனுப்பும் மெசேஜுக்கும் பதில் கொடுக்காமல் இருந்தார்.
இதையடுத்து அந்த பெண் டாக்டர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி 15 லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு விட்டு ஓடிவிட்டதாக பர்கான் மீது சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் அவரை தேடினார்கள். அப்போது அவர் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பர்கான் தசீர்கானை கைது செய்தனர். விசாரணையில் அவர் தொழில் அதிபர் போல வலம் வந்து டாக்டர் உள்பட 100 பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து போலீசார் சொகுசு கார், செல்போன், 9 ஏ.டி.எம். கார்டுகள், 4 சிம் கார்டுகள், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.