தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரிக்கையை ஏற்று, 6.05 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவுக் கழகத்தில் ஒப்படைக்க தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரிக்கையை ஏற்று, 2020-21 கரிஃப் சந்தைப் பருவக் காலத்தில் மீதமுள்ள நெல் (ராபி பயிர்) மற்றும் 2021-22 கரிஃப் பருவத்தின் நெல்லில் 6.05 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவுக் கழகத்தில் ஒப்படைக்க தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை கோரிக்கையை வலியுறுத்தி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் டெல்லியில் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பயன்படுத்தப்படும் புழுங்கல் அரிசியின் உற்பத்தி கடந்த சில வருடங்களாக தெலங்கானா மாநிலத்தில் அதிகரித்துள்ளது. ஆகவே, இந்த வகை அரிசியின் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைநகர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாநில அரசின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இது சம்பந்தமான கடிதம் 11.05.2022 அன்று வெளியிடப்பட்டது என நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில், மாநில அரசு/மாநில முகமைகள் மற்றும் இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் சி.எம்.ஆர் அரிசியை 2020-21 கரிஃப் சந்தைப் பருவக் காலத்தில் (ராபி பயிர்) விநியோகிப்பதற்கு செப்டம்பர் 2021 வரை கால அவகாசம் இருந்தது. தெலங்கானா மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப 7-வது முறையாக மே 2022 வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானாவில் 2020-21 கரிஃப் சந்தைப் பருவக் காலத்தில் (ராபி பயிர்) 40.20 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ஜூன் 2022 வரை கொள்முதல் செய்யவும், செப்டம்பர் 2022 வரை அரைப்பதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-கணபதி சுப்பிரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM