தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகின்ற மே 17 – ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த செவ்வாய் முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கியிருந்தாலும்கூட ஏப்ரல் 20 – ம் தேதி திருவிழாவுக்குக் கம்பம் நடு நிகழ்வு முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, ஆயிரங்கண் பானை, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் எனத் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
திருவிழாவில் மலர் விமானம், முத்துப் பல்லக்கு, பூப்பல்லக்கு என நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்புரிந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக திருத்தேரில் எழுந்தருளிய அருள்மிகு கௌமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் கரகோசத்துடன் இழுத்துச் சென்றனர்.
நான்கு நாள்கள் நடைபெறும் தேரோட்டத்தின் முதல் நாளான நேற்று நிலையில் இருந்து பக்தர்களால் இழுத்து வரப்பட்ட தேர் கிழக்கு கோபுர வாயிலில் அம்மன் சந்நிதி முன்பாக நிறுத்தப்பட்டது. நாளை மற்றும் மறுநாள் கோயிலின் தெற்கு வாயில் மற்றும் மேற்கு வாயில் வழியாகச் சுற்றி வரும் திருத்தேர் வரும் 16 – ம் தேதி நிலைக்கு வந்தடையும். நான்கு நாள்களுக்குத் திருத்தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மனுக்கு 17 – ம் தேதி ஊர் பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் திருவிழா நிறைவுபெறும்.
முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்தை அதிகரிக்க வேண்டும்
திருவிழாவில் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, சேறு பூசுதல், காவடி, கம்பத்திற்குத் தீர்த்தம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த முல்லைப்பெரியாறு ஆற்றில் குளித்துவிட்டு அங்கிருந்து கோயிலுக்குச் செல்வது பக்தர்களின் வழக்கம். ஆனால் நிகழாண்டு முல்லைப்பெரியாற்றில் 100 கனஅடி மட்டுமே தண்ணீர் திறப்பதால் ஆற்றில் ஓரத்தில் சிறு ஓடை போல நீர் செல்கிறது. திருவிழாவுக்கு லட்சகக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் ஆற்றங்கரையோரம் மிகவும் சுகாதாரக்கேடு நிலவுகிறது. ஆறும் மாசடைந்துள்ளது.
இதனால் பக்தர்கள் குளித்துவிட்டுத் தங்களுக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் சிரமம் உள்ளது. மேலும் பக்தர்களுக்குப் போதிய கழிப்பறை மற்றும் குழியலறை அமைக்கப்படாததால் உடைமாற்றுவதற்குக் கூட பெண்கள் சிரமப்படும் சூழல் உள்ளது. எனவே முல்லைப்பெரியாறில் போதிய நீர் திறக்கவும், பக்தர்களுக்கான அடிப்படை வசதியை உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.