சென்னை: நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், கடந்த 1ம் முதல் நேற்று வரை கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 82 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 26 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 4 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 1 குற்றவாளி, சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 117 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.