பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து இறக்குமதி: மதுரையில் இரண்டாம் தர தக்காளி விலையே கிலோ ரூ.85

மதுரை; உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தும் இரண்டாம் தர தக்காளி விலையே இன்று ரூ.85 விற்பனையானது. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் தக்காளி வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

அன்றாட சமையலில் தக்காளி அத்தியாவசிய காய்கறியாக உள்ளது. அதன் விலை திடீரென்று உயந்து, குறைந்து வந்தாலும் பெரும்பாலான நாட்களில் கிலோ ரூ.5 முதல் ரூ.15 வரை நிலையாக காணப்படும். ஆனால், கரோனாவுக்கு பிறகு தக்காளி விலையை நிர்ணயிக்கவே முடியவில்லை. திடீரென்று கிலோ ரூ.100க்கு உச்சமாக சென்று திடீரென்று கிலோ ரூ.5க்கு குறைகிறது. கடந்த சில மாதம் முன் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை நீண்ட நாள் இருந்தநிலையில் சமீப காலமாகதான் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விலை இருந்தது.

தற்போது மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியிருக்கிறது. தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் நேற்று இரண்டாம் தர தக்காளி விலையே கிலோ ரூ.80 முதல் ரூ.85 வரை தரத்தைப்பொறுத்து விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் இதை விட விலை அதிகமாக விற்பனையானது. அதனால், ஏழை, நடுத்தர மக்கள், சமையலில் தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரி காசிமாயன் கூறுகையில், ‘‘கடந்த சில நாளாக ஆந்திரா, வெங்கடகிரி கோட்டாவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து மதுரைக்கு கொண்டு வருகிறோம். ஆந்திராவில் இன்று(நேற்று) முதல் தரம் தக்காளி 15 கிலோ பெட்டி ரூ.1,100 வரை சென்றது. இந்த தக்காளி பழங்களை வாங்கி வந்து தமிழகத்தில் வியாபாரம் செய்ய முடியாது. அதனால், 15 கிலோ பெட்டி 800 முதல் ரூ.850 வரையுள்ள இரண்டாம் தரமான தக்காளி வாங்கி வந்து விற்கிறோம்.

அதனால், ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனையாகிறத. இந்த விலை நாளை மேலும் உயரும். சமீபத்தில் பெய்த கோடை மழை தொடர்ந்து பெய்ததால் தக்காளி அழிந்துவிட்டது. குறிப்பாக தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உடுமலைப்பட்டி, பழனி, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில் மழைக்கு காலியாகவிட்டது. அதனால் சந்தைகளுக்கு வெறும் 20 முதல் 25 சதவீதம் உள்ளூர் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. மீதி 75 முதல் 80 சதவீதம் தக்காளி தற்போது ஆந்திராவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.

தற்போது அங்கும் புயல் வந்து தக்காளியை அழிந்துள்ளது. அதனால், தமிழகம், ஆந்திரா இரு மாநில மக்களும், அந்த மாநில தக்காளியைதான் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும், ஒரு சில முககூர்த்த நாட்கள் வருவதாலும் தக்காளி விலை மேலும் கூடும் வாய்ப்புள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.