டெல்லியில் திருமண இணையதளம் மூலம் திருமண ஆசைகாட்டி, பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி, தெற்கு டெல்லி சைபர் பொலிஸிடம் பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஜீவன்ஸாதி திருமண இணையதளம் மூலம் அறிமுகமான ஃபர்ஹான் தசீர் கான் என்பவர், தொலைபேசியில் பேசி தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போலி வணிகத்திற்கு ஆதரவாக பல பரிவர்த்தனைகள் செய்து தன்னிடம் 15 லட்சம் வரை ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே விசாரணையை தொடங்கிய பொலிஸார், திருமண இணையதளத்தில் இருந்து கான் குறித்த தகவல்களை சேகரித்தனர். அப்போது அவர் இதுபோன்ற தளங்களில் ஏராளமான போலி சுயவிவரங்களை உருவாக்கி டெல்லி, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களுடன் தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருமண இணையதளங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் மூலம் கான் வழங்கியிருந்த தகவல்களைக் கொண்டு, அவர் பஹர்கஞ்ச் எனும் இடத்தில் இருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக பேசிய பொலிஸார் கூறுகையில், 35 வயதாகும் ஃபர்ஹான் தசீர் கான் 13 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி சுமார் ஒரு கோடி வரை ஏமாற்றியுள்ளார். தற்போது வரை அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களில் 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கானிடம் இருந்து ஒரு சொகுசு கார், 9 டெபிட் கார்டுகள் மற்றும் விலையுர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் மீது பிற மாநிலங்களில் பெண்கள் புகார் அளித்துள்ளார்களா என்பது குறித்து கண்டறிய முயற்சித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
12ஆம் வகுப்பு வரை படித்த ஃபர்ஹான் கான், தனது பெற்றோர் இறந்துவிட்டதாக திருமண இணையத்தளங்களில் பதிவிட்டு, ஆண்டுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விலையுயர்ந்த கார் ஒன்றை காட்டி பல பெண்களிடம் பணக்காரர் என்ற தோற்றத்தை காட்டியுள்ளார். உண்மையில் அந்த கார் அவருடைய உறவினர் ஒருவருடையது.
மேலும் வெவ்வேறு நகரங்களுக்கு சென்று வீடியோ கால் மூலம் பேசி நம்பவைத்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே திருமணமான கானுக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறார். மேலும் அவருக்கு தந்தை மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்கள். பெண்களிடம் அனுதாபத்தை பெற அவர் தனது பெற்றோர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும், தனக்கென யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.