திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார்(57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இவர் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆசிரியர் சசிகுமார் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனால் இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிரியர் சசிகுமார் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி ஒரு மாணவி மலப்புரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அறிந்த சசிகுமார் தலைமறைவானார். இதற்கிடையே அவர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்து அவரை சிபிஎம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியிலுள்ள ஒரு சுற்றுலா விடுதியில் சசிகுமார் தலைமறைவாக இருப்பதாக மலப்புரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.