புனேவின் கோந்த்வாவில் ‘ஈத் மிலன்’ விழா நடைபெற்றது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பல்வேறு நாடுகள் குறித்தும் தனது கருத்துகளை அதில் தெரிவித்தார். அப்போது அவர், “இன்று உலகில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. ரஷ்யா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடு உக்ரைன் போன்ற சிறிய நாட்டைத் தாக்குகிறது, இலங்கையில் இளைஞர்கள் அனைவரும் சாலையில் சண்டையிடுகிறார்கள், போராடுகிறார்கள். அந்த நாட்டின் தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
அதேபோல, உங்களுக்கும் எனக்கும் சகோதரர்கள் உள்ள அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு தலைவர் 2018-ல் பதவியேற்றார். ஆனால் அவரின் பிரதமர் பதவி என்பது சக்திவாய்ந்த இராணுவத்தின் ‘பொம்மை’ என்று கேலி செய்யப்பட்டார். அதையும் கடந்து அவர் நாட்டுக்காக உழைத்தார். அந்த நாட்டிற்கு ஒரு வழிகாட்ட முயற்சி மேற்கொண்டார், ஆனால் எதிர்க்கட்சிகளால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அங்கு வேறு ஒரு படம் காட்டப்படுகிறது.
நான் மத்திய அமைச்சராகவும், கிரிக்கெட் நிர்வாகியாகவும் பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளேன். அப்போது நாம் லாகூர், கராச்சி என எங்குச் சென்றாலும் எங்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒருமுறை, நாங்கள் நமது அணியுடன் ஒரு போட்டிக்காக கராச்சியிலிருந்தோம். ஒரு நாள் கழித்து, வீரர்கள் தங்களைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். காலை உணவுக்காக ஒரு உணவகத்திற்குச் சென்றோம், கட்டணத்தைச் செலுத்த முயன்றபோது, உணவக உரிமையாளர் மறுத்துவிட்டார். நாங்கள் அவரின் விருந்தினர்கள் என்று கூறினார். எனவே, பொதுவான பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல, அவர்களின் நாட்டில், அரசியல் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே மோதல்கள் உருவாகின்றன” எனக் குறிப்பிட்டார்.