இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் சிந்து மாகாணத்தில் 121 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடின.
வெயில் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயில் அளவு அதிகரித்தபடியே இருந்து வருகிறது. தற்போது உச்சகட்டமாக வெயில் சுட்டெரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதற்கிடையே வெயில் தாக்கம் தொடர்ந்தபடி இருக்கும் என்று பாகிஸ்தான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.