பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏழை எளிய மாணவிகள் பயன் அடையும் வகையில் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது.
அதேசமயம் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை.
இந்த திட்டம் கடந்த பொங்கலுக்கும், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து காத்து கிடந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படாததால் தமிழக அரசு மீது பெண்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.