`பெண்ணுரிமை பேசிக்கொண்டே பெண்ணடிமையை ஊக்குவிப்பதுதான் திராவிட மாடலா?' -திமுக-வுக்கு ஓபிஎஸ் கண்டனம்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்தின்போது, தங்களுக்கு சீட் ஒதுக்காதது குறித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மேயர் இந்திராணியிடம் முறையிடச் சென்றனர். அப்போது, மேயரின் கணவர் அவர்களிடம் பஞ்சாயத்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது அதனைப் படமெடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை தி.மு.க-வினர் தள்ளிவிட்டதில், செய்தியாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி

இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இந்தச் சம்பவம் தொடர்பாக தி.மு.க-வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டுக்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்குப் பதிலாக அவர்கள் கணவன்மார்களும், உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல். ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக்கொண்டு, மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது `படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. ஒருவேளை இதுதான் `திராவிட மாடல்’ போலும். இது பெண் முதலில் தந்தைக்கு அடிமை, பின்னர் கணவனுக்கு அடிமை, அதைத் தொடர்ந்து மகனுக்கு அடிமை என்னும் பழமைவாதத்தை நோக்கி செல்வது போல உள்ளது.

ஓ.பி.எஸ்

இதனைத் தி.மு.க அரசு வேடிக்கை பார்ப்பது என்பது, இதிலும் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை பொதுமக்களிடையே எழுப்பியிருக்கிறது. ‘மகளிர் உரிமை’ குறித்து அடிக்கடி பேசும் முதலமைச்சருக்கு உண்மையிலேயே மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை இருக்குமானால், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும். மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி – அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களின் கணவர்களோ அல்லது உறவினர்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.