தென் மாநிலமான தெலங்கானாவுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக 27 கேள்விகளை அவர் அமித் ஷாவிடம் எழுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “மத்திய பா.ஜ.க அரசு தென் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. மக்கள் இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தெலங்கானா மக்கள் மத்தியில் பா.ஜ.க வெறுப்பைப் பரப்புகிறது. மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், குஜராத் போன்ற மாநிலங்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றியது. தெலங்கானா மக்கள் முன் பொது மேடையில் அமித் ஷா இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும்.
தெலங்கானா மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவோம். ஆந்திர மாநிலத்தின் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் எங்களின் உரிமையான பங்கைக் கோருவோம். ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் தெலங்கானாவுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றியிருக்கிறது என்பதை பா.ஜ.க தெரிவிக்க வேண்டும். தெலங்கானா இளைஞர்கள் ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.