சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுவாழ்வு மைய உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் நடந்துவந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக ராஜியை, அந்த மையத்தின் ஊழியர்கள் 7 பேர் அடித்து கொலைசெய்ததாக போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
குறிப்பாக மையத்தின் உரிமையாளரான கார்த்திகேயன் மற்றும் லோகேஸ்வரி தம்பதியினர், வீடியோ கால் மூலம் ஊழியர்களை வைத்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உரிமையாளர்கள் கார்த்திகேயன், லோகேஸ்வரி தலைமறைவாகி விட்டனர்.
இதற்கிடையில் கடந்த 7-ம் தேதி கார்த்திகேயன் கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, அண்ணா சாலை போலீசார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். போதை மறுவாழ்வு இல்லத்தில் ராஜி கொலை செய்யப்பட்டது மற்றும் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 12 பேரின் உடலில் கடுமையான காயங்கள் இருப்பது தொடர்பாக, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கார்த்திகேயனை ஆஜர்படுத்தி 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர்.
போலீசாரின் மனு மீதான விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம், கார்த்திகேயனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கார்த்திகேயனிடம் அண்ணாசாலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தங்களது மனைவி எங்கே?, ராஜியை அடித்து கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்டது கேள்விகளை கேட்டு கார்த்திகேயனிடம், காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM