பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்குமாறு மோகனின் ‘ஹரா’ படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.
80-களில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். இவர் நடிப்பில் வெளியான ‘மௌன ராகம்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘இதயக் கோயில்’, ‘மெல்ல திறந்தது கதவு’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களி மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்பெற்ற படங்களாகும். கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு இவரது படங்கள் பெரிதாக வராதநிலையில், தற்போது ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘ஹரா’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சாதரண மனிதனின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில், மோகனுக்கு ஜோடியாக முதன்முறையாக நடிகை குஷ்பூ நடிக்கிறார். தந்தை, மகளுக்கு இடையேயான உறவைச் சுற்றி வரும் இக்கதையில், நம் குழந்தைகளுக்கு பள்ளி முதலே இந்தியச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், ஸ்பெயினில் மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதுபோல், தமிழகத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிக்கை வாயிலாக படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தனது மகளின் பள்ளிக்கு சென்று, மாதவிலக்கு காலத்தில் விடுப்பு வழங்குமாறு மோகன் கேட்கும் காட்சி இருப்பதை அடுத்து இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெண்களுக்காக மாதவிலக்கு காலத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ள அறிவிப்பைக் கேட்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோன்ற முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலினும் பரிசீலிப்பார் என்று நம்புகிறோம் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் வில்லனாக நடிக்கிறார்.