சென்னை: தமிழகத்தில் வாரம்தோறும் சனிக்கிழமையில் நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
இதுவரை 29 முகாம்கள்
இதற்கிடையே தொற்று பாதிப்பு குறைந்ததாலும், பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி யிருக்க அவசியமில்லை என்றுஅறிவிக்கப்பட்டதாலும், வாரம் தோறும் நடைபெற்று வந்த மெகா முகாம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, கரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்.30-ம் தேதி 28-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து 29-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் கடந்த 8-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட்டது.
இதுவரை நடைபெற்ற முகாம்கள் மூலம், 4 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 11.05 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.44 சதவீதத்தினர் முதல் தவணையும், 81.55 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மெகா கரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நிறுத்தப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “பெரும்பாலானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனால், இந்த வாரம் சனிக்கிழமை (இன்று) மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது. தேவைப்பட்டால் மீண்டும் முகாம் நடத்தப்படும். அதேநேரம், வழக்கமான மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்” என்றார்.