ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி: தடை விதித்த இங்கிலாந்து!

உக்ரைன் மீது
ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அதேசமயம், புடினின் குடும்பத்தினர் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் ரகசிய காதலியாக அறியப்படும்
அலினா கபேவா
மீது
இங்கிலாந்து
புதிய தடைகளை விதித்து உள்ளது. ஓய்வு பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா என்பவர் விளாடிமர் புடினின் ரகசிய காதலியாக அறியப்படுகிறார். ஆனால், இதுபற்றி புடின் இதுவரை எவ்வித தகவலையும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.

ரஷ்யாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான நேசனல் மீடியா குரூப்பில் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருக்கும் அவருக்கு, வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை ரஷ்யாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் அன்பளிப்பாக அளித்துள்ளதாக புடினை கடுமையாக விமர்சித்து வருபவரும், தற்போது சிறையில் இருப்பவருமான அலெக்ஸ் நாவல்னி தெரிவித்துள்ளார்.

யுஏஇ புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு!

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் கூறுகையில், “விளாடிமர் புடினின் குடும்பம், பால்யபருவ நண்பர்கள் மற்றும் புடின் அரசால் பலன் பெற்ற நபர்கள், அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆகியோர் மீது புதிய தடைகள் விதிக்கப்படுகின்றன. விளாடிமர் புடினுக்கு உதவி செய்யும் அனைவர் மீதும் இங்கிலாந்து தொடர்ந்து தடைகளை விதிக்கும்.” என்றார்.

அதேபோல், விளாடிமர் புடினின் முன்னாள் மனைவி லுட்மிலா ஆக்ரெத்னயா மீதும் இங்கிலாந்து தடைகளை விதித்துள்ளது. முன்னதாக, உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்னர் அலினா கபேவாவை சுவிட்சர்லாந்துக்கு புடின் அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அவரை அங்கிருந்து வெளியேற்றும்படி கோரிக்கைகள் வலுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.