உதய்பூர்: காங்கிரஸ் கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்வது தொடர்பாக 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சோனியா காந்தி, கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினரை பலிகடா ஆக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியில் தேவையான மாற்றங்களை செய்ய கட்சித் தலைமை முடிவு செய்தது. மேலும், 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவும், அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்கான காங்கிரசின் ‘சிந்தனை அமர்வு கூட்டம்’, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில், 450க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்று ஆலோசிக்கின்றனர். கூட்டத்தை தொடங்கி வைத்து கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:காங்கிரஸ் கட்சி தற்போது சந்தித்து வரும் சூழ்நிலைகள் முன்பு எப்போதும் ஏற்படாதவை. அசாதாரண சூழ்நிலைகள், அசாதாரணமான நடவடிக்கையை எடுக்கக் கோருகின்றன. இதில் நான் முழு விழிப்புடன் உள்ளேன். கட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கும், முன்னேறுவதற்கும் தனக்குள்ளே மாற்றங்களை செய்ய வேண்டும். நமக்கு முன்னேற்றமும், மாற்றமும் தேவை. இந்த நேரத்தில் கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். இது கூட்டு முயற்சிகளில் மட்டுமே நடக்க வேண்டும். அதை ஒருபோதும் தள்ளிப் போடக்கூடாது. இந்த பயணத்தில், இந்த சிந்தனை அமர்வு கூட்டம் ஓர் சிறந்த தொடக்கமாகும்.சமீபத்திய தோல்விகளை நாங்கள் மறந்துவிடவில்லை. மீண்டும் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களையும் மறந்து விடவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் அறியாதவர்கள் அல்ல. எனவே, கட்சியை மீண்டும் வலுப்படுத்தவும், நாட்டில் மோசமடைந்து வரும் சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் கட்சியில் அனைவரும் ஒருங்கிணைந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.தற்போதைய ஆளும் பாஜ அரசில், பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் அடிக்கடி பயன்படுத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்ற முழக்கத்தின் உண்மையான அர்த்தம் வலி மிகுந்ததாக உள்ளது. அது, நமது சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், நமது சமமான குடிமக்களாகவும் இருக்கும் சிறுபான்மையினரை கொடூரமாக குறிவைப்பது, பலிகடா ஆக்குவது மற்றும் அவர்களை மிருகத்தனமாக நடத்துவதும் என்பதுதான். நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைத்திருப்பதும், ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றிய எண்ணத்தைத் தகர்ப்பதும் நடக்கிறது. மேலும், அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவது, மிரட்டுவது, அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது, அவர்களை சிறையில் அடைப்பது நடக்கின்றன. புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பாஜ அரசு நம் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறது. அதன் தலைவர்களை குறிப்பாக, ஜவகர்லால் நேருவை தொடர்ந்து இழிவுபடுத்துகிறது. அவர்களின் பங்களிப்புகள், சாதனைகள், தியாகங்களை மறைத்து சிதைக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் மகாத்மா காந்தியை கொன்றவர்களை மகிமைப்படுத்துகிறது. நலிந்த பிரிவினர், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் மீது நாடு முழுவதும் தொடர்ந்து நடக்கும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் அரசாங்கம் கண்மூடித்தனமாக இருக்கிறது. பிரச்னைகளை திசை திருப்பும் தந்திரங்களை அரசு கையாள்கிறது. அனைத்தையும் பற்றிப் பேசும் பிரதமர் இந்த விஷயங்களில் மவுனம் சாதிக்கிறார்.இந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கட்சி என்பது தனிப்பட்ட லட்சியங்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை கட்சி உங்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளது. அதற்கு பதில் மரியாதை செய்ய வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் பேசினார்.ரயிலில் வந்தார் ராகுல்உதய்பூர் சிந்தனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து ரயிலில் பயணித்தார். கையில் ஒரே ஒரு தோள் பையுடன் டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தில் அவர் சேதக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். காங்கிரஸ் கட்சியால் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு பெட்டியில் பயணித்த ராகுலை, ஏராளமான தொண்டர்கள் ரயில் நிலையத்தில் குவிந்து வழியனுப்பி வைத்தனர். 12 மணி நேர ரயில் பயணத்தில் ரயில் நின்ற முக்கிய ரயில் நிலையங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து ராகுலை வரவேற்றனர். காலை 5 மணிக்கு ராஜஸ்தானின் சித்தோர்கர் ரயில் நிலையத்தில் இறங்கிய ராகுலுக்கு உள்ளூர் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடையில் டீ குடித்த ராகுல், அங்குள்ள இளைஞர்களிடம் பேசினார். விவசாயிகள் மற்றும் போர்டர்களிடமும் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.* சிந்தனை அமர்வு கூட்ட ஆலோசனையில் பங்கேற்ற தலைவர்கள் கூட்ட அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தகவல்கள் கசியக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. * ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி மட்டுமே தருவது தொடர்பாக சிந்தனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என மூத்த தலைவரான அஜய் மக்கான் கூறினார். 5 ஆண்டுக்கு மேல் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும், இது காந்தி குடும்பத்திற்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். 50:50 பார்முலாகாங். பொதுச் செயலாளர் அஜய் மக்கன் அளித்த பேட்டியில், ‘‘கட்சியில் மண்டல அளவில் இருந்து காரியக் கமிட்டி வரையில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கட்சியில் இளைஞர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கும்,’’ என்றார்.கம்யூ. வேட்பாளருக்கு பிரசாரம் மாஜி ஒன்றிய அமைச்சர் நீக்கம் கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தாமஸ் (72), பலமுறை ஒன்றிய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். கட்சியிலும் பல உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்தாண்டு நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு சீட் தரப்படாததால், கடும் அதிருப்தி அடைந்தார். அவர் பாஜ.வுக்கு தாவப் போவதாக தகவல் வெளியானது. இதனால், அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில். கடந்த மாதம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கட்சியின் தடையையும் மீறி பங்கேற்றார். திருக்காக்கரை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து, நேற்று முன்தினம் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் சேர்ந்து பிரசாரம் செய்தார். இதனால், கட்சியில் இருந்து நேற்று இவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.