ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் பிரகாஷ் ராஜ் – முதல்வர் கொடுக்கும் கிப்ட்!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியிடம் இருக்கின்றன.

தற்போது பதவியில் உள்ள எம்.பிக்கள் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோர் வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. தெலங்கானா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் பாஜக இடையே 2 எம்பி பதவிகள் யார் யாருக்கு? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். முதலமைச்சரின் எர்ரவல்லி பண்ணை வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அத்துடன் கடந்த பிப்ரவரி மாதமும் இருவரும் சந்தித்து பேசி இருக்கின்றனர்.

இரண்டு முறை நடந்த இந்த சந்திப்பினால், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் அடிபடுகிறது. அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சட்டப்பேரவையில் தற்போதுள்ள பலத்தின்படி, 3 தொகுதிகளிலும் ஆளும் கட்சி போட்டியின்றி வெற்றி பெறும் அளவிற்கு பலத்துடன் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.