ரிலீஸ் ஆன இருபதே நாட்களில் ஓடிடியில் வெளியாகும் சிரஞ்சீவி – ராம் சரணின் ‘ஆச்சார்யா’

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ திரைப்படத்தின் ஓடிடி தேதி வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்குப்பிறகு சிரஞ்சீவி நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ‘ஆச்சார்யா’. சிரஞ்சீவியுடன் ராம் சரண், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ’ஆர்ஆர்ஆர்’  ஹிட்டோடு ஹிட்டாக வெளியானது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தது. அதுவும், தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கியிருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. ’மிர்ச்சி’ மிரட்டலான ஹிட் அடிக்கவே மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் எனே நேனு’ என இரண்டு படங்களைக் இயக்கி, அதையும் சூப்பர் ஹிட் ஆக்கினார். அடுத்ததாக மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கிய ‘ஜனதா கரேஜ்’ படமும் வெற்றி பெற்றது. இதுவரை நான்கே படங்களை இயக்கி தெலுங்கின் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரட்டலா சிவாவின் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், ’ஆச்சர்யா’ ஆச்சர்யமூட்டும் வெற்றியை குவிக்கவில்லை. வந்த தடம் தெரியாமல் பெருத்தத் தோல்வியை தழுவியது. 140 கோடியில் தயாரிக்கப்பட்டு வெறும் 75 கோடி ரூபாய்தான் வசூல் செய்தது.

image

இந்த நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருந்தது. அதன்படி , படம் வெளியாகி 20 நாட்கள் கழித்து வரும் மே 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதே தேதியில், ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.