சேலம் அருகே வீடுபுகுந்து தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட இரண்டு பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது தந்தை வீட்டில் வசித்துவந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு சசிகலா துணையாக இருந்ததாகக் கூறி அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் சசிகலா மற்றும் அவரது கணவரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சசிகலா மற்றும் அவரது கணவர் கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரை எடுத்துக் கொள்வதற்கு ரூபாய் 500 லஞ்சமாக பெற்றதாகவும், இருந்தபோதிலும் தாங்கள் புகார் அளித்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் தங்களைத் தாக்கிய குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் கருமந்துறை காவல் நிலையத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு காவல்துறையினர் செயல்படுவதாக அதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண் புகார் அளித்துள்ளார். தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்து அவர்களை தடுத்தபோது அவர்கள் தன்னை தாக்கியதாக அம்பிகா புகார் அளித்த போதிலும், எதிர் தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்ட கருமந்துறை காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM