ஐதராபாத்:
ஐதராபாத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் இயக்குநர் பதக்கங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நீண்ட காலத்திற்கு விவசாய உற்பத்தியில் கணிசமான லாபத்தை அடைய, நாட்டில் விவசாய ஆராய்ச்சியின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும். விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ற, லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும்.
விரிவாக்க நடவடிக்கைகள் இல்லாமல் எந்த ஒரு முன்னேறிய நாடும் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியாது.
விவசாயப் பல்கலைக்கழகங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான உற்பத்தி முறைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கடைசி விவசாயிக்கும் இந்த முன்னேற்றங்களை எடுத்துச் செல்வதை தங்கள் கடமையாகக் கருத வேண்டும்.
கிராமங்களுக்குச் சென்று உண்மையான விவசாயப் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்ள மாணவர்களை விவசாயப் பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆராய்ச்சி பலன்களை கொண்டு வர பிரதமர் மோடியின் பரிசோதனைக்கூடத்திலிருந்து நிலத்துக்கு என்ற திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கான விரிவாக்க நடவடிக்கைகளை அதிக தொழில்நுட்ப வாசகங்களைப் பயன்படுத்தாமல், எளிய மொழியில் அமைக்க வேண்டும்.
மொபைல் அடிப்படையிலான விரிவாக்க சேவைகளை ஆராய்ந்து, அனைத்து சேவைகளுக்கும், தேவைக்கேற்ப, எந்த குழப்பமும் இல்லாமல் ஒரே இடத்தில் தீர்வுகளை வழங்க வேண்டும்.
நீர் கிடைப்பது குறைதல், பருவநிலை மாற்றம், மண் சீரழிவு, பல்லுயிர் இழப்பு, புதிய பூச்சிகள் மற்றும் நோய்கள் உள்பட இந்திய விவசாயத்தின் பல்வேறு சவால்களைச் சமாளிக்க, ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்.
பயிற்சி பெற்ற விவசாய-வணிக பட்டதாரிகள் வேலை தேடுவதற்குப் பதிலாக விவசாயத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றி, வேலை வழங்குபவர்களாக உயர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.