சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 1,250 கிராமப்புற கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்தும் வகையில் சார்நிலை அலுவலர்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின்படி 1,250 கோயில்கள் இறுதி செய்யப்பட்டு, கோயில்களின் பெயர் விவரப் பட்டியல் அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1,250 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநர் கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன், மண்டல அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தி, மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற்று, பொது நல நிதி மூலம் திருப்பணியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கி, பணிகளை விரைவில் முடித்து, குடமுழுக்கு நடத்து மாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.