திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு வரும் 16ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 16ம் தேதி வரை மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு அதிகமாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்வதை குறிக்கும் முன்னறிவிப்பு ஆகும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்வதை குறிக்கும். 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கேரளா கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதி, மலைப்பகுதி, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.