கேரளாவில் 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் செயின்ட் ஜெம்மாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், மலப்புரம் நகராட்சி மன்ற உறுப்பினருமான கே.வி.சசிகுமார் 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் தவறுகளை விசாரித்து அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு பொதுக் கல்வி இயக்குநர் பாபு ஐஏஎஸ்-க்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், மூன்று முறை மலப்புரம் நகராட்சி கவுன்சிலருமான கே.வி.சசிகுமார், மார்ச் 2022ல் செயின்ட் ஜெம்மாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றார். தாம் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் பள்ளி முன்னாள் மாணவர் ஒருவர் ‘#MeToo’ குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து பல மாணவர்கள் புகார் அளித்ததையடுத்து, நகராட்சி கவுன்சிலர் பதவியை சசிகுமார் ராஜினாமா செய்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்குழு உறுப்பினர் சசிகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். மலப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து சசிகுமார் தலைமறைவானார். ஒரு வாரம் கழித்து அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
“பள்ளி நிர்வாகத்தின் செயலற்ற தன்மையே காரணம்”
பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் கூற்றுப்படி, சில மாணவர்கள் சசிகுமாருக்கு எதிராக 2019 ஆம் ஆண்டே புகார் அளித்தனர். ஆனால் அவர் மீது பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முன்னாள் மாணவர் சங்கம் மேலும் பல புகார்களுடன் மலப்புரம் மாவட்ட காவல்துறைத் தலைவரை அணுகி புகாரளித்தனர். தற்போது சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM