ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை கண்டித்து, 350–க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
ஜம்மு – காஷ்மீரில், பட்கம் மாவட்டத்தின் சதுாரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்குள், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள், அங்கு எழுத்தராக பணியாற்றி வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட், 36, என்பவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் பட் இறந்தார்.
சம்பவத்தை கண்டித்து யூனியன் பிரதேசம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. பட்கம் மாவட்டத்திலிருந்து ஸ்ரீநகர் விமான நிலையம் நோக்கி பேரணியாக சென்றவர்களை, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
இதற்கிடையே ராகுல் பட் கொல்லப்பட்டதை கண்டித்து பண்டிட்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ராகுல் பட் கொலையை கண்டித்து 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement