பச்சை நிற ஜெர்சிக்கும் பெங்களூர் அணிக்கும் ஆகாது என்று தான் தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. “Go green” என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இந்த பச்சை நிற ஜெர்சியை ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆட்டத்திற்கு பெங்களூரு அணி அணிந்து வருகிறது. இதுவரை இந்த ஜெர்சி அணிந்து ஆடிய 11 போட்டிகளில் 3ல் மட்டும் தான் பெங்களூர் வென்றுள்ளது. சுனில் நரைன் துவக்க வீரராகி அதிரடி அரைசதம் அடித்த அற்புதம் எல்லாம் பெங்களூர் இந்த ஜெர்சியை அணிந்த போது தான் அரங்கேறியது. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த ஜெர்சி அணிந்திருக்கும் போது பெங்களூருவுக்கு அருள் வந்துவிடும். சாதுவான கோவில் யானைக்கு மதம் பிடித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு ருத்ர தாண்டவம் ஆடிவிடும் RCB. முதன் முறையாக இந்த ஜெர்சி அணிந்து பேட்டிங் ஆடும் போது, பரமேஸ்வரன் என்ற பந்துவீச்சாளரின் முதல் ஓவரை 37 ரன்களுக்கு பறக்க விட்டார் கெயில். பச்சை ஜெர்சியில் RCB-க்கு அருள் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு கெயில் காட்டிய டிரெய்லர் அது. அதற்கான மெயின் பிக்சர் ஐந்து ஆண்டுகள் கழித்து வந்தது.
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பெட்டிங் பிரச்சினை காரணமாக தடை விதிக்கப்பட, குஜராத் மற்றும் புனே என இரண்டு புதிய அணிகள் களம் கண்டன. இப்போதைய குஜராத் போலவே அப்போதைய குஜராத்தும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்று மிக மகிழ்ச்சியாக புள்ளிப் பட்டியலின் உச்சத்தில் இருந்தது. பெங்களூரு அணியோ அவர்களின் வழக்கமான பாணியில் வாழ்வா சாவா என கால்குலேட்டரும் கையுமாக இருந்தனர். குஜராத் அணி கேப்டன் மிஸ்டர் IPL ரெய்னா, பிறக்க இருந்த தனது குழந்தையைக் காணச் செல்ல, அன்றைய ஆட்டத்தில் மெக்கல்லம் கேப்டனாக இருந்தார். அன்றைக்கு குஜராத்துக்கு நடக்க இருந்த ஒரே நல்லதும் மிக விரைவாக நடந்து விட்டது. டாஸ் வென்றது மட்டும் தான் குஜராத்துக்கு அன்று நடந்த ஒரே நல்ல விசயம். டாஸை வென்று பெங்களூருவை பேட்டிங் ஆட அழைத்தது குஜராத்.
கடந்த 2011 முதல் மொத்த IPL தொடரையும் தனது கைக்குள் வைத்திருந்த கரீபிய கலிப்சோ கெயிலின் பிடியிலிருந்து மெல்ல பந்துவீச்சாளர்கள் விடுபடத் தொடங்கினர். கெயில் வந்தாலே அவ்வளவு தான் என்று ஒரு காலத்தில் KGF பாணியில் கொடுக்கப்பட்ட பில்ட்-அப்புகள் எல்லாம் காலப்போக்கில் விவேகம் பட விவேக் ஓபராய் பில்ட்-அப்புகள் போல ஆகிவிட்டது. கெயில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறிக் கொண்டிருந்ததால் பெங்களூரு அணியின் பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க ஒரு ஹீரோ தேவைப்பட்டார். எப்போதெல்லாம் பெங்களூருவின் சாம்ராஜ்யம் சறுக்கி விழும் நிலையில் இருக்கிறதோ அப்போதெல்லாம் தனி ஆளாக அதை தூக்கி நிறுத்தும் ஏபி… இல்லை இல்லை.. ஏலியன் டிவில்லியர்ஸ் அன்றும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கெயில் 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆறாவது ஓவரிலேயே அடியெடுத்து வைத்தார் டிவில்லியர்ஸ். தான் சந்தித்த இரண்டாம் பந்தையே சிக்சருக்கு அனுப்பி ரன் கணக்கை துவங்கினார். அவர் ஆரம்பித்த முறையைப் பார்த்து “உடம்ப இரும்பாக்கிக்கடா கிரிகாலா” என்று பந்துவீச்சாளர்கள் மனதில் நிச்சயம் நினைத்திருக்கக் கூடும். காரணம் அதன் பின்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சரமாரி தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஸ்பின்னர்களை வைத்து டிவில்லியர்ஸை அவுட் ஆக்கி விடலாம் என கணக்குப் போட்டிருந்தார் மெக்கலம். ஆனால் டிவில்லியர்ஸ் ஸ்பின்னர்களிடம் சந்தித்த முதல் ஆறு பந்திலேயே ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்கள் என அமர்க்களப்படுத்தினார்.
சற்று மெதுவாக ஆடும் ஸ்பின்னர்களையே அப்படி அடித்தால், வேகப்பந்து வீச்சாளர்களின் நிலமை? இந்த கேள்வி மெக்கலமிற்கு தோன்றும் முன்னரே குல்கர்னியின் ஓவரை 22 ரன்களுக்கு பறக்க விட்டார் டிவில்லியர்ஸ். ஸ்வீப், கவர் டிரைவ், back foot சிக்சர் போன்ற அக்மார்க் கிரிக்கெட் ஷாட்டுகளுடன் சேர்த்து டிவில்லியர்ஸின் டிரேட் மார்க் 360 டிகிரி ஷாட்டுகளும் இணைய, ரன்கள் எகிறிக் கொண்டே போனது. 25 பந்துகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் அடுத்த 18 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ஷிவில் கவுசிக், பிரவீன் தாம்பே, பிரவீன் குமார் போன்ற பந்து வீச்சாளர்கள் எல்லாம் கனவில் கூட அடுத்து இவருக்கு பந்து வீச நினைக்காத அளவுக்கான அடி.
ஒரு பக்கம் திரை தீ பிடிக்கும் என்று பீஸ்ட் மோடில் ஆடிக்கொண்டு இருந்தார் டிவில்லியர்ஸ். மறுபுறம் அமைதியின் மறு உருவமாக தனது நண்பரை ஆட விட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தார் கோலி. 39 பந்துகளில் தான் தனது அரை சதத்தையே அடித்தார் கோலி. ஏற்கனவே அந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்திருந்தார். சரி கோலியையாவது அடிக்க விடாமல் தடுத்து விட்டோமே என்று நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் அந்த மூச்சை மொத்தமாக நிறுத்த வந்தார் கோலி. 18வது ஓவர் முடிவில் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தார் கோலி. இதற்கு மேல் ஆவதற்கு என்ன இருக்கிறது என்று 19வது ஓவரை ஷிவில் கவுசிக்கிடம் மெக்கலம் கொடுக்க, அதுவரை பதுங்கி இருந்த கோலி என்னும் புலி நான்கு கால் பாய்ச்சலில் அந்த பாவப்பட்ட ஸ்பின் பவுலரை தாக்கியது.
19வது ஓவரில் மட்டும் நான்கு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்கள் வந்தன. அடுத்து பிரவீன் குமார் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு அந்தத் தொடரில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார் கோலி. பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலை கூட இவ்வளவு வேகமாக உயர்ந்தது கிடையாது. ஆனால் கோலி ஒரே ஓவரில் 65 ரன்களில் இருந்து 95 ரன்களுக்கு வந்தார் அன்று.
பீஸ்ட் மோடில் டிவில்லியர்ஸ் ஒரு பக்கம் ஆடினால் வாத்தி ரெய்ட் எப்படி இருக்கும் என்று காட்டினார் கோலி. ஒரு டி20 இன்னிங்ஸை எப்படி கட்டமைக்க வேண்டும், சக வீரர் அடித்து ஆடும் போது எப்படி விக்கெட்டை விடாமல் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், கடைசி நேரத்தில் எப்படி அதிரடியாக ரன் சேர்க்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு ஒரு முழு நேர பாடம் எடுக்கும் வாத்தியாக அந்த இன்னிங்ஸை ஆடி முடித்தார் கோலி. பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் பெரு வெற்றியை அன்று பதிவு செய்தது. டிவில்லியர்ஸ் – கோலி இணைந்து நமக்கு கொடுத்த பல மகிழ்ச்சி தருணங்களில் மிக முக்கியமான இந்தத் தருணம் வரலாற்றில் நடந்த தினம் இன்று. ஒரு கையை இழந்தது போல கோலி ஆடி வரும் இந்த தொடர் எந்தளவு டிவில்லியர்ஸின் கெமிஸ்ட்ரியை அவர் மிஸ் செய்கிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறது.