8-வது மாடியில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமி – உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!

கஜகஸ்தானில் அடுக்குமாடி கட்டடத்தின் 8-வது மாடியில் ஜன்னலில் தொங்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நூர்-சுல்தானில் உள்ள கட்டடமொன்றில், 3 வயது சிறுமி 8-வது மாடி ஜன்னலில் தொங்கியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, சபித் ஷொண்டக்பேவ் என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சபித்தை பலரும் ஹீரோ எனப் புகழ்ந்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து சபித், “என்னிடம் பாதுகாப்பு உபகரணம் ஏதும் இல்லை, அதனால் என் நண்பர் என் கால்களைப் பிடித்தார். அதே நேரத்தில் நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை, குழந்தைக்கு உதவ மட்டுமே விரும்பினேன்” எனக் கூறினார். சபித்தின் இந்த தன்னலமற்ற செயலுக்காக, நூர்-சுல்தான் நகரின் துணை அமைச்சர் சபித்துக்கு பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார்.

மேலும், உள்ளூர் ஊடக செய்திகளின்படி, 4 குழந்தைகளுக்கு தந்தையான சபித், கைசிலோர்டாவில் வசிக்கும் தன் குடும்பத்துக்காக நூர்-சுல்தானில் தனியாக தங்கி வேலைபார்த்து வருவதாக அறியப்படுகிறார். அதுமட்டுமல்லாமல், சபித்தின் இந்த செயலுக்காக, மூன்று படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்ட் மற்றும் ஒரு டி.வி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.