கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாச்சலில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அசாமில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்குள்ள திமா ஹசாவ் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும், இருப்பு பாதைகள் நீரில் மூழ்கியும் சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கினால், கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நாகான் ஆகிய 5 மாவட்டங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், வெள்ளத்தால் நாசமாகி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம், தீயணைப்பு துறையினர், பேரிடர் சேவை, மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.