திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 5 பேர் மீது திருவாரூர்நகர காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் தெற்கு வீதிக்கு, கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திமுக வசமுள்ள திருவாரூர் நகர்மன்றத்தில் ஏப்.11-ம் தேதி நடைபெற்றகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து, திருவாரூர் தெற்கு வீதியில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மே 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பாஸ்கரன், திருவாரூர் நகரத் தலைவர் சங்கர் உட்பட 5 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுப் பாதையை வழிமறித்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் திருவாரூர் நகர போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.