கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. ரஷியா போர் தொடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில் அந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது. கிழக்கில் வெற்றி பெற்றாலும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார்.
தலைநகர் கீவ்வில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷியாவை பயங்கரவாத நாடாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்திய உக்ரைன் அதிபர், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணம் உக்ரைன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்…இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு