கொல்கத்தா: ‘மம்தாவை இந்தியா விரும்புகிறது’ என்ற இணையதள பிரசாரத்தை திரிணாமுல் கட்சி தொடங்கியுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், திரிணாமுல் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி ‘மம்தாவை இந்தியா விரும்புகிறது’ என்ற இணையதள பிரசாரத்தை திரிணாமுல் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம், நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் சங்கமித்ரா தெரிவித்தார். இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது தொடங்கப்பட்ட இணையதளத்தில், ‘மம்தாவை இந்தியா விரும்புகிறது’ என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் பிரசாரம் செய்யவுள்ளோம். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான நல்லாட்சியை, ஒவ்வொரு இந்தியனும் பெற விரும்புகிறோம். என்று கூறப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தனது அரசியல் வாழ்க்கையின் 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, 2024ம் ஆண்டில் இந்தியாவின் முதல் வங்களாப் பிரதமராக மம்தா பானர்ஜி இருப்பார்’ என்று அவர்கள் கூறினார்.