இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து… புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர்!

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற சிற்றூரில் 1712 ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. கிறித்துவ மதத்தை தழுவிய இவர் தனது பெயரை தேவசகாயம் என்று மாற்றி கொண்டார்.

உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரசரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டார். அதன் மூலம் மறைசாட்சியானர். அவருடைய உடலை மூன்று நாட்களுக்குப் பின்னர் எடுத்து வந்து நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்

அதன்படி இன்று, தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்கும் நிகழ்ச்சி, வாடிகன் நகரிலுள்ள ரோமில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ் கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார்.

இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.

புனிதர் பட்டம் பெறுகின்ற மறைசாட்சி தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதர் ஆவார். இதற்கான விழா அடுத்த மாதம் (ஜூன்) 5ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.