இலங்கையில் மக்கள் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு குழுவை நியமித்த பிரதமர் ரணில்

கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.
6-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக கோரி நடக்கும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபோது அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இலங்கையில் வன்முறை வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து வருகிறது. கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ருவான் விஜயவர்த்தன, போலீஸ் மற்றும் ராணுவத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமித்தார்.
சுகாதார அமைச்சகத்தின் செயல்பாடுகளுக்கு தேவையான சுகாதார அமைச்சக பிரதிநிதி மற்றும் அமைதியை நிலைநாட்ட ராணுவம் மற்றும் போலீஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒந்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பிரதமர் தெரிவித்தார்.
கோத்தபய ராஜபக்சே
மேலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எவையும் இடம்பெறாது என ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பாராளுமன்றத்தில் 124-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு 124-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பலம் உள்ளது. அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி மற்றும் பல கட்சிகள் பங்குபெறுகின்றன.
அந்த குழுக்களின் ஆதரவுடன் 124க்கும் மேற்பட்ட பெரும்பான்மையை பெற முடியும். இதன்மூலம் சிறந்த அரசாங்கத்தை உருவாக்க முடியும். பிரச்சினைகளை தீர்க்க அனைத்து தலைவர்களும் ஒன்றிணைவார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவரும், யாழ்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் முடிவு செய்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான விக்னேஸ்வரன் ரணில் அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.