கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். தொடர்ந்து நான்கு அமைச்சர்களை அவர் நியமித்தார்.
அதன்படி பொது நிர்வாக அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜி.எல்.பெரீஸ், நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜயசேகர ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி சார்பற்ற அரசு ஒன்றை அமைக்க வருமாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, ரணில் விக்ரமசிங்கே அழைத்து விடுத்துள்ளார்.
இதனால் அவரது அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி குறித்து இன்று முழு விளக்கம் அளிக்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை நிறைய இருப்பதாகவும், அவைகளுக்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைகளுக்கான நிதியை பெறுவது குறித்து தமது அரசு ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை