உதட்டில் முத்தமிடுவது, கொஞ்சுவது ஆகியவை இயற்கைக்கு மாறான பாலுறவு குற்றங்கள் அல்ல என்று கூறிய மும்பை உயர்நீதிமன்றம் போக்சோ குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்கீழ் உதடுகளில் முத்தமிடுவதும், அன்புடன் அரவணைப்பதும் கொஞ்சுவதும் இயற்கைக்கு மாறான பாலுறவு குற்றங்கள் அல்ல என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், மைனர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது.
கடந்த ஆண்டு மும்பையில் வசிக்கும் 14 வயது சிறுவன் ஒருவர், தந்தையின் அலமாரியில் இருந்து பணத்தை திருடி தான் விளையாடும் ஆன்லைன் கேமிற்கு ரீசார்ஜ் செய்ய முயன்றுள்ளார். இதை கண்டுபிடித்த தந்தை தன் மகனிடம் யாரிடம் பணத்தை கொடுத்தாய் என்று கேட்டுள்ளார். மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ரீசார்ஸ் கடையில் இருக்கும் நபரிடம் கொடுத்தாக அவர் கூறியுள்ளான். ரீசார்ஜ் எடுக்கச் சென்றபோது அந்த நபர் தன் உதடுகளில் முத்தமிட்டதாகவும் அவரது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதாகவும் சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சிறுவனின் தந்தை காவல்துறையை அணுகி ரீசார்ஜ் கடைக்காரர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைத் தடுக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலுறவு குற்றங்கள்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்க இயலவில்லை என்று நீதிபதி பிரபுதேசாய் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில், இயற்கைக்கு மாறான உடலுறவு என்பது முதன்மையான பார்வைக்கு பொருந்தாது என்று நீதிபதி பிரபுதேசாய் கூறினார். “பாதிக்கப்பட்டவரின் அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் அந்தரங்கத்தை தொட்டு அவரது உதடுகளை முத்தமிட்டார் என்பதைக் குறிக்கிறது. எனது கருத்தில், இவை இயற்கைக்கு மாறான பாலுறவு குற்றங்கள் பிரிவு 377 இன் கீழ் குற்றமாகாது” என்று நீதிபதி கூறினார். ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரருக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு என்று கூறிய உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.30,000 பிணைத் தொகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM