மும்பை:
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிவசேனா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கினார்.
பாஜகவை விட சிவசேனாவின் இந்துத்துவம் சிறந்தது என்றும், சில போலி இந்துத்துவவாதிகள் நம் நாட்டை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலைநில் நேற்று கோரேகான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா பாஜக தலைவரும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே பேச்சிற்கு பதில் அடி கொடுத்துள்ளார்.
சிவசேனா என்பது மும்பையை மட்டுமே குறிக்கும் ஒரு கட்சி என்றும், அது மகாராஷ்டிராவையோ அல்லது இந்துத்துவாவையோ குறிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரே அரசின் அதிகாரம் பாபர் மசூதி அமைப்பு போன்று உள்ளதாகவும் அதை வீழ்த்தும் வரை ஓய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் பற்றி உத்தவ் தாக்கரே ஒருபோதும் பேசவில்லை என்று அவர் தெரிவித்தார்.
புலிகளின் புகைப்படங்களை கிளிக் செய்வதன் மூலம் ஒருவர் புலியாகி விடுவதில்லை, இப்போது நாட்டில் ஒரே ஒரு புலிதான் உள்ளது அது நரேந்திர மோடி என்றும் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்…
உ.பியில் சோகம்: கங்கை நதியில் குளிக்க சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி