பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று
பாகிஸ்தான்
பிரதமராக இருந்த
இம்ரான் கான்
மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன.
இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன் சாப் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நாடு முழுவதும் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், மார்டன் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், ஊழல் விவகாரங்களில் சிக்கிய திருடர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்கிறார்கள். திருடர்களிடம் நாட்டின் அதிகாரத்தை கொடுப்பதைவிட பாகிஸ்தான் மீது
அணுகுண்டு
வீசுவது நல்லது என்றார்.
ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி: தடை விதித்த இங்கிலாந்து!
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் சதியால் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், பிரிட்டனில் இருந்து சிலர் பாகிஸ்தானின் விதியை முடிவு செய்கிறார்கள் என்று முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமரின் சகோதரருமான நவாஸ் ஷெரீப்பை மறைமுகமாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதிய அரசை தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். மக்கள் சாலையில் இறங்கி போராடினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.” என்றும் அழைப்பு விடுத்தார்.
அதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் பேசிய இம்ரான் கான், தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். “என் உயிரை பறிக்க சதி நடக்கிறது. இந்த சதி பற்றி சில நாட்களுக்கு முன்பு எனக்கு முழுமையாக தெரிய வந்தது. மூடிய அறைகளில் எனக்கு எதிராக இங்கும் வெளிநாடுகளிலும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரிய வரும்.” என்று இம்ரான் கான் கூறினார்.