சென்னை: ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நேற்று (மே 14) துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதேபோல, தமிழக அரசும் நேற்று துக்கம் அனுசரித்தது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். தற்போது உள்ள அமீரகத்தை கட்டியமைப்பதில் அவரது பெரும் பங்களிப்புகளும், 2009-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது துபாயை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் என்றென்றும் நினைவுகூரப்படும். மறைந்த தலைவருக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினர் மற்றும் அமீரக மக்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.