உதய்பூரில் மூன்று நாட்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி, ஞாயிற்றுக்கிழமை கட்சியில் ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு போன்ற விதிகளுக்கும் அமைப்பு சீர்திருத்தங்களுக்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உட்பட அனைத்து நிலைகளிலும் உள்ள பதவிகளில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 50% பிரதிநிதித்துவம் மற்றும் அனைத்து நிலைகளிலும் பதவியில் இருப்பவர்களுக்கு ஐந்தாண்டு கால வரம்பு விதிக்க வேண்டும் என்ற விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உதய்பூர் நவ சங்கல்ப் சிந்தனை பிரகடனம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தின்படி, ஒரு குடும்பம், ஒரு சீட்டு என்ற விதியில், தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் பிற உறவினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக உழைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி மற்றும் கொள்கை விவகாரங்களில் முடிவெடுப்பதில் காங்கிரஸ் தலைவருக்கு உதவ, அமைப்பினுள் இருந்து ஒரு சிறிய அரசியல் ஆலோசனைக் குழுவை அமைக்கும் திட்டத்திற்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், நாடாளுமன்ற சபை அமைப்பைப் சீரமைப்பதற்கான் முன்மொழிவு காங்கிரஸ் காரியக் கமிட்டியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவருக்கு முடிவுகளை எடுப்பதற்கு உதவ, காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உள்ள உறுபினர்களில் இருந்து ஒரு சிறிய குழு அமைக்கப்படும்.
அதேபோல், அனைத்து மாநிலங்களிலும் அரசியல் விவகாரக் குழு அமைக்கப்படும். தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்றும், கட்சியின் தகவல் தொடர்பு அமைப்பு புதுப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நிர்வாகத்துக்காக சிறப்பு அமைப்பும் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரத்தில் கேரளப் மாநில காங்கிரஸ் கமிட்டியால் நடத்தப்படும் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இந்த பயிற்சிக்கான ஆரம்ப மையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“