ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டு வரவேண்டும் என விரும்புகிறேன். மூத்த தலைவரோ, இளம் தலைவரோ கட்சியில் யாராக இருந்தாலும் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும். வியர்வை சிந்தாமல் எதுவும் நடக்காது. மக்களிடம் செல்வதுதான் இருக்கக்கூடிய ஒரே வழி.
காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நிர்வாக ரீதியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும்.
பிராந்தியங்களின் தொகுப்புதான் இந்தியா என அரசியல் சாசனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும், தனிக் கட்சிக்கும் சொந்தமான நாடு கிடையாது.
பாகுபாடின்றி அனைவரின் கருத்துகளையும் காங்கிரஸ் கேட்கும். இதுதான் கட்சியின் டிஎன்ஏ.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இதற்கு முன் எப்போதும் இதுபோன்று அதிகமாக இருந்தது இல்லை.
நீதித்துறை அழுத்தத்திற்கு ஆட்பட்டு உள்ளது, தேர்தல் ஆணையத்தின் கரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மக்களுடனான பிணைப்பை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுக்கோள் விடுக்கிறேன்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராகவே என்னுடைய போர். என் வாழ்க்கை முழுவதும் அவர்களை எதிர்த்து போரிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்