தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சசிகலா, “எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான் ஜெயலிலதா மறைவுக்குப் பிறகும் ஏற்பட்டுள்ளது. அப்போது எப்படி கழகம் மீண்டதோ அதே போல் தற்போதும் மீண்டு எழும்… அதற்கு நானே காரணமாவேன், கட்சியை மீட்கும் வரை நான் ஓயாமட்டேன்” எனப் பேசினார்.
சசிகலா நிகழ்ச்சிகளை தகவல் தொழில் நுட்ப பிரிவின் கீழ் வெளிக்கொண்டு வரும் அவருடைய ஆதரவாளரான ஆதவன் என்பவரின் திருமணம் தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஆதவன் குடும்பத்தினர் விமர்சையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பத்து கிலோ மீட்டர் தூரம் வரை சாலையின் இருபுறமும் அ.தி.மு.க கொடியை பறக்க விட்டிருந்தனர். `பொன்மனச் செம்மலின் வாரிசே’, `தாயின் தாயே’, `வேலு நாச்சியாரே…’ என சசிகலாவை வரவேற்று பிளக்ஸ் வைத்திருந்தனர்.
மண்டபத்தின் நுழைவாயிலில் முன் பகுதியில் துளசி, தாமரை மலர்களை கொண்டு அலங்கார பந்தல் அமைத்திருந்தனர். சரியாக 11.40 மணிக்கு இதில் கலந்து கொண்டார் சசிகலா. சிறுவன் ஒருவன் வரவேற்புரை நிகழ்த்தினான். அப்போது நடராசன் குறித்து அவன் பேசியபோதும், புரட்சித் தலைவிக்கு தாயாக இருந்தவர் எனக் குறிப்பிடும்போதும் சசிகலாவின் கண்கள் கலங்கின. பின்னர் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார் சசிகலா.
மணமக்களையும், அவர்களது குடும்பத்தையும் வாழ்த்திய பின்னர் பேசிய சசிகலா, “கழகம் ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அ.தி.மு.க., உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான், ஜெயலிலதா மறைவுக்குப் பிறகும் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.
அன்றைக்கு எப்படி கழகம் மீண்டெழுந்தோ, அதே போல் தற்போதும் புதுப்பொலிவு பெறும். இதற்கு நானே காரணமாவேன். கட்சியை மீட்கும் வரை நான் ஓயாமட்டேன். தமிழக மக்கள் நம் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா? என எதிர்பார்க்கும் சூழலில், விரைவில் அதை நிறைவேற்றி காட்டுவேன். நம் கழகத்தை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது.
அனைவரையும்ஒருங்கிணைத்து, ஒரே இயக்கமாக உருவாக்க பயணித்து வரும் சூழலில், தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். பிரச்னைகளை தீர்க்க பொறுமையோடு எதிர்கொண்டால் வெற்றியை காணமுடியும்” என்றவர் குட்டி கதை ஒன்று கூறுகிறேன் எனத் தொடர்ந்தார்.
“குரங்கு ஒன்று மாம்பழம் ஒன்றை சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையை ஊன்றி மரமாக வளர செய்தால் நமக்கு நிறைய பழங்கள் கிடைக்கும் நம் இஷ்டத்துக்கு மாம்பழங்களை சாப்பிடலாம் என, மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீர் ஊர்றியது. சிறிது காலம் ஆகியும் அந்த இடத்தில் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவரசம், அந்த அவசர புத்திக்கொண்ட குரங்கு, மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்யை எடுத்து பார்ப்பதும், மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது.
மாங்கொட்டை பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சும் விட்டது. ஆனால் மாங்கொட்டை செடியாக முளைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை எடுத்து துார எரிந்து விட்டு வருத்தப்பட்டது. அந்த குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும், அதன் அவசரபுத்தி நியாயமானதல்ல. காலம் என்ற நியதி இல்லாமல், எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை.
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால், விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சில விஷயங்களை நாம் மறந்து விட வேண்டும். அப்படி செயல்பட்டால் நம் இயக்கம் வலிமை பெறும்” என்றார்.