“கருணாநிதி ஊரில் பாஜக-வுக்கு பெருங்கூட்டம் கூடியது இதனால்தான்!" – சொல்கிறார் கருப்பு முருகானந்தம்

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, ’கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரைச் சூட்டுவதா என பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான், தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் முடிவை கைவிடக்கோரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 12-ம் தேதி திருவாரூரில் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினார்.

பாஜக – அண்ணாமலை

இதில் யாருமே எதிர்ப்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்களில் கூடக்கூடிய கூட்டத்திற்கு நிகராக, திருவாரூரில் பா.ஜ.க-வுக்கு கூட்டம் கூடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதுவும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்த மண்ணில், கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் எப்படி இவ்வளவு கூட்டம் கூடியது… அந்தளவுக்கு டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் பா.ஜ.க வளர்ந்துவிட்டதா எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது இந்த ஆர்பாட்டக் கூட்டம்.

கருணாநிதி!

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்தாலும், தமிழ்நாட்டில் அந்தக் கட்சிக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதே அரசியல் நோக்கர்கள் முன்வைக்கும் பிரதான வாதமாக இருக்கிறது. அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்களே வந்தாலும்கூட, தமிழ்நாட்டில் பெரிதாக சொல்லிக் கொள்ளூம் அளவுக்கு கூட்டம் கூடுவதில்லை. இந்த நிலையில்தான், திருவாரூரில் பா.ஜ.க. நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் கோட்டம் கூடி அரசியல் இறங்கி விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

பொதுவாக கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில்தான் பா.ஜ.க-வுக்கு கணிசமான எண்ணிக்கையில் கூட்டம் கூடும். ஆனால், டெல்டா மாவட்டத்தில் எப்படி இவ்வளவு கூட்டம் கூடியது… இங்கும் பா.ஜ.க வளர்ந்துவிட்டதா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்க கம்யூனிஸ்டு தலைவராக இருந்த எஸ்.ஜி.முருகையனின் மகனும், அ.தி.மு.க-வின் நகர இளைஞரணி துணைத் தலைவராக இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவருமான எஸ்.ஜி.எம். ரமேஷின் முயற்சியாலும், செல்வாக்கினாலும்தான் அதிகளவில் கூட்டம் கூடியதாக ஒரு பேச்சு நிலவுகிறது. அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வில் இணைந்த கோவி.சந்துருவும் ஒரு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

உண்மையான பிண்னணிதான் என்ன?

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருத்துறைப்பூண்டி தி.மு.க நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், “எங்கள் தலைவர் கலைஞரின் சொந்த மாவட்டம் இது. மாவட்டம் முழுவதும் படர்ந்து பரவி, தி.மு.க வேரூன்றி உள்ளது. இங்கு கம்யூனிஸ்டுகளும் அதிகம். ஒருபோதும் இங்கு பா.ஜ.க வளர வாய்ப்பே இல்லை. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அதிகளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து பா.ஜ.க-வினர் ஆள்களை அழைத்து வந்துள்ளார்கள். இதற்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.பாண்டியன்

இதில் அ.தி.மு.க.-வினர், குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் மறைமுகமாக செயல்பட்டிருக்கிறார். பல பகுதிகளிலிருந்து, அ.தி.மு.க தொண்டர்களையும் இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். எஸ்.ஜி.எம்.ரமேஷினின் முயற்சியினாலும், செல்வாக்கினாலும் அதிக அளவில் கூட்டம் கூட்டப்பட்டதாக சொல்வது உண்மையல்ல. திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள சித்தமல்லிதான் இவரது சொந்த ஊர். இந்தப் பகுதியில் இவருக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. இங்கிருந்து மக்கள் யாரும் செல்லவில்லை. இவர் அடிக்கடி கட்சி மாறிக்கொண்டே இருப்பதால், இவர் மீது பகுதி மக்களுக்கு மதிப்பு கிடையாது. ஆதரவாளர்களும் கிடையாது’’ என்றார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவரும், பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தத்திடம் இது குறித்து கேட்டோம். “தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் போலவே, டெல்டா மாவட்டங்களிலும் பா.ஜ.க சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக வளர்ச்சி அடைந்துள்ளோம். திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்ததும், கிராமம் கிராமமாக சென்று, திட்டமிட்டு பணியாற்றினோம். கிளை நிர்வாகிகளை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் சந்தித்து பேசினோம். திருவாரூர் தேரோடும் வீதிக்கு, கருணாநிதி பெயர் சூட்டுவதை, தி.மு.க-வினரை தவிர பிற கட்சியினர் எவருமே விரும்பவில்லை. குறிப்பாக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.

கருப்பு முருகானந்தம்

இதனால் நாங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எங்களது கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அதிக அளவில் தன்னெழுச்சியுடன் கலந்துகொண்டார்கள், இந்தக் கூட்டத்தை நாங்கள் பணம் கொடுத்து கூட்டவில்லை. அ.தி.மு.க பின்னணியிலிருந்து செயல்பட்டதாக சொல்வதும் பொய். எஸ்.ஜி.எம்.ரமேஷ் பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம்தான் எங்கள் கட்சியில் சேர்ந்தார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தனது ஆதரவாளர்களை அழைத்து வரட்டுமா என அவர் கேட்டார். ஆனால் நாங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டோம். அவர்களை மேடையில் ஏற்ற நேரம் போதாது என்பதால்தான் வேண்டாம் என சொல்லிவிட்டோம். எந்த ஒரு தனிநபரின் முயற்சியாலும் கூட்டம் கூடவில்லை. இயல்பாக கூடிய கூட்டம் இது. எங்களை பொறுத்தவரை இதுவே குறைவான கூட்டம்தான். இனிவரும் நாள்களில் இன்னும் மிகப்பெரிய கூட்டம் கூடும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.