திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திமுக வசமுள்ள திருவாரூர் நகர்மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சார்பில் மே 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பாஜகவினர் திரளாக பங்கேற்றனர். மேலும், ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவனடியார் திருக்கூட்டத்தினரும் பெருமளவில் பங்கேற்றனர்.
திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காவல் நிலையத்துக்கு 20 அடி கிழக்கே மேடை அமைக்கப்பட்டு, தெற்கு வீதி முழுவதும் பாஜக தொண்டர்களின் தலை தென்படும் அளவுக்கு கூட்டம் திரண்டிருந்தது. மேடைக்கு பின்புறமும் 400-க்கும் மேற்பட்டோர் நின்று அண்ணாமலையின் பேச்சைக் கேட்டனர்.
திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பாஜகவின் கொள்கைக்கு எதிர்மனநிலை கொண்டவர்கள் வலுவாகவுள்ள திருவாரூரில் எப்படி பாஜகவுக்கு இத்தகைய கூட்டம் திரண்டது என்பதே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் நோக்கர்களின் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
இக்கூட்டத்துக்காக தொண்டர்களை திரட்டும் பணிகளில் பாஜகவினர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக அணிகள் சார்பிலும் தனித்தனி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் திரண்டதாக உளவுப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் சைவ சமயத்தின் தலைமைபீடமாக ஆன்மிகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது. அதேபோல, மறைந்த முதல்வர் கருணாநிதி, தனது மாணவப் பருவத்தில், தமிழ் கொடியேந்தி உலா வந்து, ‘இந்திப் பெண்ணே வீழ்க, தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டு, தனது அரசியல் பயணத்தை இதே திருவாரூரில் இருந்தே தொடங்கினார். இதனால், திமுகவினரும் தங்களது அரசியல் புனிதபூமியாக திருவாரூரை கருதுகின்றனர்.
அத்தகைய திருவாரூரில், புகழ்மிக்க தியாகராஜர் ஆழித்தேர் ஓடும் வீதிக்கு, கருணாநிதியின் பெயரைச் சூட்டியதற்கு தனது முதல் எதிர்ப்பை பதிவு செய்து, ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களின் ஆதரவையும் பெற்று, 5 மாவட்ட பாஜகவினரை ஓரிடத்தில் சங்கமிக்கவைத்து கூட்டத்தை பாஜக திரட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து திருவாரூர் திமுக பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, “அரசியல் கட்சியினர் ஒன்று கூடும்போது, தங்களது தலைவர்களை வாழ்த்தி முழக்கமிடுவது வழக்கம். ஆனால், பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்கள், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களை வாழ்த்தி முழக்கமிடவில்லை. மாறாக ஆரூரா, தியாகேசா என தியாகராஜரை வாழ்த்தியும், திமுக, திமுக தலைவரை விமர்சித்தும் முழக்கமிட்டனர்.
பெயர் மாற்ற விஷயத்தில், திமுக மேலிடத்தின் ஆலோசனை இல்லாமல், உள்ளூர் கட்சியினர் எடுத்த முடிவே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காரணம். இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பாஜக, திமுகவை ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி என மக்களிடத்தில் தவறான கருத்தை பரப்பி, அரசியல் லாபம் பெறும் நோக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. எனவே, ஆன்மிகத்தை முன்வைத்து கூடிய கூட்டத்தைக் கண்டு, எவ்வித அரசியல் கணக்கும் பார்க்க வேண்டியதில்லை” என்றார்.
இந்தகூட்டத்தை ஒருங்கிணைத்த பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் கோட்டூர் ராகவன் கூறியது: திருவாரூர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரண்ட கூட்டம் திமுகவினரின் அடிமனதையே அசைத்துவிட்டது. கருணாநிதி, எந்த வீதியில் அண்ணாவின் கரம்பிடிப்பதற்காக இந்திக்கு எதிராக அரசியல் ஊர்வலம் நடத்தினாரோ, அதே வீதியில் எங்கள் கட்சித் தலைவர் அண்ணாமலை அறைகூவல் விடுத்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு கூடிய கூட்டம், அரசியலும் ஆன்மிகமும் கலந்து திமுகவுக்கு விடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறோம். மேலும், திமுகவின் இந்தி எதிர்ப்பு, ஆன்மிக எதிர்ப்பு அரசியலுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி உள்ளோம் என்றார்.