கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேரைசுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞர்| Dinamalar

பபல்லோ-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பல்பொருள் அங்காடியில், 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்;

மூவர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பபல்லோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்தார். ராணுவ உடை அணிந்து, அதன் மேல் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத, ‘புல்லட் புரூப்’ உடை அணிந்திருந் தார். தலையில் அணிந்திருந்த ‘ஹெல்மெட்’டில், ‘கேமரா’ பொருத்தப்பட்டு இருந்தது. திடீரென துப்பாக்கியை எடுத்த இளைஞர், கறுப்பினத்தவர்களை குறிவைத்து சரமாரியாக சுடத் துவங்கினார்.

இதில், 10 பேர் பலியாகினர்; மூவர் காயம் அடைந்தனர். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரின் பெயர் பேடன் கென்ட்ரான், 18, என்பது தெரிய வந்தது. நியூயார்க்கின் கான்க்ளின் என்ற இடத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், கறுப்பின மக்கள் மீது வெறுப்புணர்வு உடையவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.அந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம், அவரது சமூக வலைதளத்தில் இரண்டு நிமிடங்கள் நேரலையாக ஒளிபரப்பாகியது.

இதற்கிடையே, அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில், சுற்றுலா பயணியரை கவரும், ‘தி பீன்’ என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு, நுாற்றுக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் திரண்டு இருந்தனர்.அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 16 வயது சிறுவன் பலியானார். யார் சுட்டது என்பது தெரியவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.