கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று விரும்புவதாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் ராகுல்காந்தி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மேலும் பேசியதாவது, “வியர்வை சிந்தாமல் எதுவும் நடக்காது. மக்களிடம் செல்வதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. மூத்த தலைவரோ, இளம் தலைவரோ கட்சியில் யாராக இருந்தாலும் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும்.
கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற திட்டத்தை கொண்டு வரவேண்டும் என விரும்புகிறேன். மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியும் இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்.
அனைவரிடமும் பாகுபாடின்றி கருத்துகளை காங்கிரஸ் கட்சி கேட்கும். இதுதான் நமது கட்சியின் டிஎன்ஏ. மக்களுடனான நம் பிணைப்பை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இதனை நம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
நாட்டில் உள்ள அணைத்து நிறுவனங்களையும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாதுகாக்க முடியும். பிராந்தியங்களின் தொகுப்புதான் இந்தியா என்று அரசியல் சாசனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு தனி நபருக்கும், தனிக் கட்சிக்கும் இந்தியாயை சொந்தம் கொண்டாட முடியாது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உள்ளது. நீதித்துறை அழுத்தத்திற்கு ஆட்பட்டு உள்ளது, தேர்தல் ஆணையத்தின் கரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
என்னுடைய போர் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராகவே இருக்கும். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை எதிர்த்து போராடி கொண்டே இருப்பேன்.” என்று ராகுல்காந்தி பேசினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.