ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரில் வெள்ளை நுரையுடன் தண்ணீர் வெளியேறுவது நேற்று வரை 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நந்திமலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, அங்கிருந்து பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம் வழியாக பயணித்து இறுதியில் தமிழக எல்லையான கொடியாளம் கிராமம் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது.
இதில் பெங்களூரு நகரப்பகுதியை கடந்து வரும் போது தென்பெண்ணையாற்றில் அங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர்மற்றும் குடியிருப்புகளின் கழிவு நீர் ஆகியவை கலந்து, சுத்தமான ஆற்று நீர் அசுத்தமடைந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது. இந்த ரசாயனம் கலந்த மற்றும் துர்நாற்றம் மிகுந்த தண்ணீரை அணையில் இருந்து வெளியேற்றும் போது வெள்ளைநுரை பொங்கி எழுந்து தென்பெண்ணை ஆறு முழுவதும் குவியல் குவியலாய் வெள்ளை நுரையுடன் தண்ணீர் ஓடுகிறது.
நடப்பாண்டு கோடையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 11-ம் தேதி முதல் தினமும் கனமழை பொழிந்து வருவதை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலந்த அசுத்தமான நீர் வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையில் தேங்கி நிற்கும் இந்த தண்ணீரை தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றும் போது கடந்த 12-ம் தேதி முதல் ஆற்று நீரில் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளை நுரை குவியல் குவியலாய் மிதந்து செல்கிறது.
கடந்த 5 நாட்களாக இந்த நிலை நீடிப்பதால் தென்பெண்ணை ஆற்று நீரை உடனடியாக சுத்திகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போதைய அணையின் நீர் மட்டம் 39.85 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 504கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 560 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.