ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் புதியதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இந்திய எல்லை பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்கரை பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டு 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடியின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியும், கலங்கரை விளக்க வளாகத்தில் குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு ரேடார்
இதன் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள நவீன ரேடார் கருவிகள் மூலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும். கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில் அமைக்கப்படும் மின் விளக்கின் ஒளியை 30 கி.மீ தூரத்திலிருந்து, அதாவது இலங்கையின் தலைமன்னாரிலிருந்தும் பார்க்கலாம்.
புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தை நேற்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.