தமிழ்நாட்டின் முதல் புனிதர் – கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் புனிதர் பட்டம்!

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சுதந்திரத்துக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று தேவசகாயம் பிள்ளை பிறந்தார். அவருக்கு பெற்றோர் நீலகண்ட பிள்ளை என்று பெயரிட்டனர். பத்மநாபபுரத்தை தலைமையிடமாகக்கொண்டு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டபோது அரண்மணை கருவூல அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலந்தவிளை அருகே உள்ள பார்கவி அம்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் டச்சு படை தளபதியாக இருந்த டிலனாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் கிறிஸ்தவ மதம் குறித்து அறிந்துகொண்டார்.

காற்றாடி மலை

கிறிஸ்தவ மதம் மீதான ஈர்ப்பின் காரணமாக 1745-ம் ஆண்டில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மாறினார். தனது பெயரை ‘லாசரஸ்’ என மாற்றிக்கொண்டார். லாசரஸ் என்பதற்கு ‘கடவுள் என்னுடைய உதவி’ என்று பொருள். அந்த அர்த்தத்தில் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார் நீலகண்டன். அவர் மதம் மாறியதன் காரணமாக திருவிதாங்கூர் அரசு மற்றும் அவரது சொந்த ஊர் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். அவர் மீது தேசத்துரோகம் மற்றும் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அரசு நிர்வாகத்தில் இருந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

1749-ல் கைது செய்யப்பட்டு தொடர் சித்திரவதைக்குப்பிறகு 1752 ஜனவரி 14-ம் நாள் ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் உள்ள காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் பகுதி கோட்டாறு சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தேவசகாயம் பிள்ளையை தென்னிந்தியாவில் கத்தோலிக்க சமூகம் தியாகியாகக் கருதியுள்ளது. தேவசகாயம் பிள்ளையை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி முக்தி பேறு பெற்றவர் என வாடிகன் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி போப்பாண்டவரால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

புனிதர் பட்டம் வழங்கப்பட்ட தேவசகாயம் பிள்ளை

கடந்த ஆண்டு மே மாதம் வாடிகனில் நடைபெற்ற கர்த்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக வாடிகன் புனித பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக புனிதர் பட்டம் வழங்கும் விழாவிற்கான நாள் அறிவிக்கப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் இன்று வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேவசகாயம் பிள்ளை சொரூபம்

வரும் ஜூன் 5-ம் தேதி தேவசகாயம் பிள்ளையின் உயிர் பிரிந்த இடமான ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் அகில இந்திய அளவிலான விழா நடக்கிறது. அந்த திருப்பலியை போப்பாண்டவரின் இந்திய தூதர் லெயோபோஸ்டா ஜிரல்லி தலைமை தாங்கி நடத்துகிறார். வழக்கமாக சர்ச்சுடன் தொடர்புடைய பாதிரியார்கள், பிஷப்கள், கார்டினல்களுக்குதான் அவர்களின் அற்புதங்களை பொறுத்து புனிதர் பட்டம் வழங்கப்படும். ஆனால், இந்தியாவில் இல்லற வாழ்வில் இருந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதன்முறை. அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டின் முதல் புனிதர் என்ற பெருமையையும் தேவசகாயம் பிள்ளை பெற்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.