புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., மாநில பட்டியல் அணியில் தலித் பெண்கள் இணையும் நிகழ்ச்சி, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் புதுச்சேரி, வில்லியனுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் கட்சியில் இணைந்தனர்.
சாமிநாதன் பேசுகையில், ‘பெண்கள் மற்றும், தலித் மக்களுக்கு அனைத்து உதவிகளையும், பா.ஜ., செய்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் ஜன்தன் வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு நேரடி பயன்களை மக்கள் பெற்று வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.காங்., – தி.மு.க. போன்று பா.ஜ., குடும்ப கட்சி இல்லை. பா.ஜ.,வில் தொண்டராக இருப்பவர்கள் நாளை தலைவராக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. ஆகையால், பெண்கள் அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும்’ என குறிப்பிட்டார்.பட்டியல் அணி பொதுச் செயலாளர் நாகராஜ், மாநில துணைத் தலைவர்கள் கஜேந்திரன், அமாவாசை, ராஜேஸ்வரி, மாநில செயலாளர்கள் அருள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement