புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் பாதாள அறைகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு. அண்மையில் இந்த அறைகள் குறித்து விவாதம் எழுந்திருந்தது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டடதாக வரலாறு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.
அண்மையில் தாஜ்மகாலில் பூட்டப்பட்டுள்ள 22 ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இரண்டு பூட்டப்பட்ட ரகசிய அறைகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளின் படத்தை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு.
“நதிக்கரை ஓரத்தில் உள்ள பாதாள அறைகளை மறுசீரமைக்கும் பணி நடைபெற்றது. இதில் சிதிலங்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு பூச்சு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தனது ஜனவரி மாத செய்தி ஏட்டில் (Newsletter) தெரிவித்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு.